"விசாரணைக்கு அழைத்து வருபவர்களை அடிப்பது வழக்கம்" - சாத்தான்குளம் வழக்கில் தலைமைக் காவலர் சாட்சியம்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தலைமைக் காவலர் பியூலா கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி சாத்தாகுளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக 9 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பு இன்று நடைபெற்றது. அப்போது தலைமைக் காவலர் பியூலா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அவர் அளித்த சாட்சியத்தில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலவே காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் அனைவரையும் அடிப்பதை காவலர்கள் வழக்கமாக கொண்டிந்ததாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.