வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும்மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு
சுழற்சி முறையில் ஒதுக்கீடு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுபார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலை வகித்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 2 கட்டங்களாக கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்-1430, கட்டுப்பாட்டு எந்திரம் -286 மற்றும் வி.வி.பேட் - 310, கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யும் பணி வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.