திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர்களுடன் மத்திய மந்திரிகள் கலந்துரையாடல்


திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர்களுடன் மத்திய மந்திரிகள் கலந்துரையாடல்
x

திருப்பூரில் பின்னலாடை துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் பியூஷ்கோயல், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் நேதாஜி அப்பேரல் பார்க்கில் உள்ள தொழிற்பூங்காவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளித் துறை மத்திய மந்திரி பியூஷ் கோயல் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிற்சாலை இயங்கும் முறை, நவீன எந்திரங்களின் பயன்பாடு, தொழிலாளர்கள் நலன் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் தொழில் துறையினர் பலர் உடனிருந்தனர்.

இந்நிகழ்விற்க்கு பின் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஏற்றுமதியில் மேக் இன் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ஏற்றுமதிக்கு திட்டமிடப்படுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. புதிய பெண் தொழில் முனைவோர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும்" என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் திருப்பூர் பின்னலாடை துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் பியூஷ்கோயல், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.

அப்போது பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஏற்றும தியாளர் சங்கத்தினர், டையிங் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பியூஷ் கோயலிடம் வழங்கினர். பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரிடம் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது. வரும் சீசன்களில் இந்திய பருத்தி கழகம், அதிக அளவு பஞ்சு கொள்முதல் செய்து இருப்பு வைக்கவேண்டும். சந்தையில் விலை ஏறும்போது, கையிருப்பு பஞ்சை விடுவித்து விலையை சீர்படுத்த வேண்டும். பின்னலாடை துறை சார்ந்த ஆராய்ச்சி மையத்தை திருப்பூரில் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.


Next Story