பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்
பட்டுக்கோட்டையில் அடுத்த ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் அடுத்த ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டு விழா
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி நரியம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் வரவேற்றார். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
பசியை போக்கும் மாவட்டம்
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது கூறியதாவது:- பிற மாவட்டங்களில் தொழிற்சாலைகள் உள்ளது. அதனால் வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால் ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் தான் தொழில். லாபம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் விவசாயம் செய்து எல்லோருடைய பசியையும் போக்கும் மாவட்டம் தான் தஞ்சை.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே போல் மார்க்கெட்டும் புதிதாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் மார்க்கெட் ரூ.3.5 கோடியில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பாதாள சாக்கடை திட்டம்
1 லட்சம் மக்கள் தொகை கொண்டு நகரத்துக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும். ஆனால் பட்டுக்கோட்டையில் 80 ஆயிரம் மக்கள் தான் உள்ளனர். இந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து விதியில் தளர்வு செய்து அடுத்த ஆண்டு(2024) பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும்.
பட்டுக்கோட்டை பகுதிக்கு புறவழிச்சாலையும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டமும் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பெற்றுத் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் எஸ். எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, துரை.சந்திரசேகரன், அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதிபாலு ஆகியோர் பேசினர்.
இதில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்திரா, தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவர் தாஹீரா அம்மாள், துணைத்தலைவர் ராம.குணசேகரன், பட்டுக்கோட்டை நகர செயலாளர் செந்தில்குமார், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிவேல், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி ஆணையர் எல்.குமார் நன்றி கூறினார்.