பள்ளிகளில் எந்த விதிகளின் கீழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்? ஆணையர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மாநகராட்சி பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன? என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்றில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் தனக்கு பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர், 'சென்னை மாநகராட்சியில் எத்தனை பள்ளிகள் நடத்தப்படுகின்றன?. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன?. கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது தொடர்பாக கேள்வி எழுப்பி. சென்னை மாநகராட்சி ஆணையரும், கல்வித்துறை துணை ஆணையரும் பதிலளிக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.
ஆணையர் அறிக்கை
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் தரப்பில், 'சென்னை மாநகராட்சி சார்பில் 119 ஆரம்பப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர் நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1,345 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதில் உள்ள காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும், எஞ்சியவை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும், பணியிட மாறுதல் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன' என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
என்ன விதி?
இதையடுத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன? என்பது குறித்தும், எந்த விதிகளும் இல்லாவிட்டால் எந்த அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன? என்பது குறித்தும், இடமாற்றம் மூலமாக நியமிப்பதாக இருந்தால் அதற்கு எந்த பணி விதி ஒப்புதல் அளிக்கிறது? என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளி்க்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பின்னர், விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.