அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9½ லட்சத்தில் குளத்தை சீரமைக்கும் பணிகள் மும்முரம்
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வி.கே.ஆர்.புரம் ஊராட்சியில் உள்ள குளத்தை ரூ.9½ லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் வி.கே.ஆர்.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பொந்தால கண்டிகை கிராமத்தில் ரெட்டை குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால் வி.கே.ஆர்.புரம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். மேலும் குளத்தில் தண்ணீர் நிரப்பினால் குளத்தை சுற்றியுள்ள விவசாயிகள் நெல், வேர்க்கடலை மற்றும் காய்கறி போன்ற பயிர்கள் அச்சமின்றி பயிரிட்டு லாபம் பெறலாம்.
கடந்த சில ஆண்டுகளாக குளம் பராமரிப்பின்றி குளத்தின் கரைகள் சேதமடைந்தது. மேலும் குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய்களும் சேதமடைந்தது.
இந்த குளத்தை தூர்வாரி படிக்கட்டுகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக திருத்தணி ஒன்றிய நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து இந்த ரெட்டை குளத்தை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாரி, குளத்தில் சுற்றுச்சுவர் மற்றும் கரைகள் பலப்படுத்துவதற்கு திருத்தணி ஒன்றிய நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்பட்டது.
தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தில் தூர்வாரும் பணிகள் முடிவுற்று, குளத்தின் உள்சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. ஒரு சில தினங்களுக்குள் பணிகளை முடித்து தண்ணீர் வரத்தை ஏற்படுத்தி, மழை நீர் சேமிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.