யுகாதி பண்டிகை: டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து


யுகாதி பண்டிகை: டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
x
தினத்தந்தி 8 April 2024 1:27 PM IST (Updated: 8 April 2024 3:35 PM IST)
t-max-icont-min-icon

யுகாதி பண்டிகையையொட்டி டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தெலுங்கு, கன்னட புத்தாண்டான யுகாதி திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் நல்ல நாடு. அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தமிழ்நாடு தான். யாதும் ஊரே... யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலுக்கு ஏற்ப தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களை தமிழக மக்கள் தங்களின் சகோதரர்களாகவே பார்க்கின்றனர்.

தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் காலம் காலமாகவே பெருமளவில் பங்களித்து வந்துள்ளனர். தமிழர்களுடன் மொழியால் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் உணர்வால் தமிழர்களின் சகோதரர்களாகவே வாழ்கின்றனர். அவர்களையும் சகோதரர்களாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.

புத்தாண்டுகள் எப்போதும் புதிய மகிழ்ச்சியையும், உறவையும், நன்மைகளையும் கொண்டு வருபவை. அந்த வகையில் தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபடுவதற்கு இந்த நாளில் உறுதியேற்போம் என்று கூறிக் கொண்டு, தெலுங்கு, கன்னட சகோதரர்களுக்கு மீண்டும் எனது யுகாதி வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி திருநாளைக் கொண்டாடும் அந்த மொழிகளைப் பேசும் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

''முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்'' என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப தெலுங்கு பேசும் மக்களும், கன்னட மொழி பேசும் மக்களும் தமிழர்களிடமிருந்து மொழியால் வேறுபட்டு இருந்தாலும் சிந்தனையால் ஒன்றுபட்டவர்கள்; உடலால் வேறுபட்டாலும் உயிரால் ஒன்றுபட்டவர்கள். இதற்கு வாழும் எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான். தமிழ்நாடு மாநிலம் தான் மொழியாலும், பிற வகைப்பாடுகளாலும் வேறுபட்டவர்களை ஒன்றாக்கி ஒற்றுமையாக வாழச் செய்யும் மாநிலம் ஆகும்.

யுகாதி நாளில் தான் உலகம் பிறந்ததாக தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் உலகத்தை உருவாக்கிய யுகாதி நாள், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் தேவையான அனைத்து நலன்களையும், வளங்களையும் வழங்க வேண்டும். அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், இன்பம், வளமை, நிம்மதி உள்ளிட்ட அனைத்தும் நிறைய வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story