முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: 'குட்டி விரல்களுக்கு மோதிரம் அணிவித்த உதயநிதி ஸ்டாலின்'

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசளித்தார்.
சென்னை,
சென்னை, தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார்.
அவருக்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மூத்த சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. மற்றும் குடும்பத்தினரும் வந்திருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு தொண்டர்களை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவரை மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் திரளாக கூடி நின்று வரவேற்றனர்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் அரங்க வளாகத்தில் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். பின்னர் கலைஞர் அரங்கினுள் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அங்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து சொல்வதற்காக திரளாக நிற்பதை பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பார்த்து கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை சேப்பாக்கம் அரசு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசளித்தார்.