நீட் தேர்வில் விலக்கு- பிரதமரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


நீட் தேர்வில் விலக்கு- பிரதமரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

டெல்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ‘நீட்’ தேர்வு கோரிக்கையை வலியுறுத்தினார்.

டெல்லி பயணம்

தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்தில் தங்கிய அவரை முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள். அரசு அதிகாரிகளும் சந்தித்தனர். பின்னர் இரவில் தமிழக முன்னாள் கவர்னரும், பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய கவர்னருமான பன்வாரிலால் புரோகித் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

கிரிராஜ்சிங்குடன் சந்திப்பு

இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் மந்திரி கிரிராஜ் சிங்கை சந்தித்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வளர்ச்சி திட்டங்கள், மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விரிவாக விளக்கினார். மேலும் இந்த திட்டங்களுக்கான கூடுதல் நிதி மற்றும் மானியங்கள் குறித்தும் கோரிக்கை விடுத்தார்.

பிரதமருடன் சந்திப்பு

இதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் பிரதமர் நரேந்திரமோடியை, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அப்போது திருவள்ளுவர் சிலையை மோடிக்கு நினைவுப்பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் பெ.அமுதா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு தொடர்பான சில கோரிக்கைகளை உதயநிதி ஸ்டாலின் பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.

இதுபற்றி உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் பேசவில்லை

மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியை சந்தித்தபோது தமிழ்நாடு தொடர்பான 5 கோரிக்கைகளை முன்வைத்தோம். அவற்றை செய்து தருவார் என்று நம்புகிறேன். மாலையில் பிரதமர் மோடியை சந்தித்தேன். கடந்த முறை அவர் தமிழ்நாடு வந்தபோது டெல்லி வந்தால் தன்னை சந்திக்க சொல்லியிருந்தார். அதன்படி சந்தித்தேன். அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை.

தமிழக முதல்-அமைச்சரின் உடல்நலம் பற்றி விசாரித்தார். நானும் அவருடைய தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். தமிழ்நாட்டில் விளையாட்டு மேம்பாடு பற்றி விரிவாக கேட்டறிந்தார். ரூ.25 கோடி பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெறுவதை சொன்னேன். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை அடுத்த முறை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு அளிக்குமாறு கேட்டேன். அதைப்போல சாய் சென்டர் ஒன்றை சென்னைக்கு தரவும் கோரிக்கை விடுத்தேன்.

மாவட்டந்தோறும் மினி விளையாட்டு அரங்கங்கள் அமைப்பது பற்றி சொன்னேன். அதை எப்படி பராமரிப்பீர்கள்? என்று கேட்டு அவரது அனுபவங்களை சொன்னார்.

'நீட்' தேர்வு விலக்கு

'நீட்' தேர்வு விலக்கு பற்றியும் பேசினேன். அதற்கு அவர் சில விளக்கங்களை கொடுத்தார். ஆனால் உறுதி எதுவும் தரவில்லை. தமிழ்நாட்டு மக்களின் மனநிலை நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பதுதான், அதை சொல்வது எனது கடமை என்று சொன்னேன். அவரது விளக்கம் எப்படியும் இருக்கட்டும். எனவே, சட்ட போராட்டம் தொடரும் என்று சொன்னேன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி பற்றி பிரதமர்தான் சொல்ல வேண்டும். அவரிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கலாமா?. எய்ம்ஸ் விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவன் நான். 2026-ம் ஆண்டுதான் பணிகள் முடியும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெளிவாக சொல்லி விட்டார்கள். எனவே தேர்தலின்போது நான் சொன்னது உண்மை என்று ஆகிவிட்டது.

பேனா சிலை விவகாரத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் அரசு முடிவு எடுக்கும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.


Next Story