பல்லாவரம் மேம்பாலத்தில் இரு வழிப்பாதை போக்குவரத்துக்கு அனுமதி
சென்னை விமான நிலையத்தை தாம்பரம் மற்றும் 200 அடி ரேடியல் சாலையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பல்லாவரம் மேம்பாலம் ஒரு வழி போக்குவரத்துக்காக மட்டுமே திறக்கப்பட்டது.
பல்லாவரம்,
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரேடியல் சாலை மேம்பாலம் அருகில் இருந்து விமான நிலைய மேம்பாலம் அருகே வரை ஜி.எஸ்.டி. சாலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தை தாம்பரம் மற்றும் 200 அடி ரேடியல் சாலையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம் ஒரு வழி போக்குவரத்துக்காக மட்டுமே திறக்கப்பட்டது. இதனால் தாம்பரத்தில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டுமே மேம்பாலத்தில் சென்று வந்தன.
விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வரும்போது மேம்பால பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால் விமான நிலையத்தை கடந்து தாம்பரம் நோக்கி வரும்போது தினமும் காலை, மாலை அலுவலக நேரங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் பல்லாவரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
எனவே விமான நிலையத்தில் இருந்து பல்லாவரத்தை கடந்து வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலானது. இதனால் பல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தார்கள்.
இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் மேம்பால பகுதியில் ஆய்வு நடத்தினர். பொதுமக்கள் வசதிக்காக மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது இருவழிப் பாதையாக மேம்பாலத்தை மாற்றியமைக்க மேம்பாலத்தில் சாலை நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முதல் பல்லாவரம் மேம்பாலத்தில் இலகு ரக வாகனங்கள் இருவழிகளிலும் செல்ல இருவழிப்பாதை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.