தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் - இருவர் கைது
தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை,
தஞ்சையில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பே மதுபான பாரில் சயனைடு கலந்த மது வாங்கி குடித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடையை போலீசார் பூட்டினர். இது குறித்து தஞ்சை நகர கிழக்குப்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல் மற்றும் ஊழியர் காமராஜை தஞ்சை நகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கின் முழு விவரம்:-
தஞ்சை கீழவாசல் கொண்டிராஜபாளையம் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன்மார்க்கெட் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே டாஸ்மாக் மதுபான பார் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக்கடைக்கும், மதுபான பாருக்கும் ஒரே வாசல் தான் உள்ளது. இந்த பாருக்கு நேற்று காலை 11 மணி அளவில் தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த குப்புசாமி (வயது 68), பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்த குட்டிவிவேக் (36) ஆகியோர் மது குடிக்க சென்றனர். குப்புசாமி தற்காலிக மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார். குட்டிவிவேக் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
டாஸ்மாக் கடை மதியம் 12 மணிக்கு தான் திறக்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே பாரில் மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் குப்புசாமி பாருக்கு சென்று மது அருந்தி விட்டு எதிரே உள்ள மீன் வியாபாரம் செய்யும் இடத்துக்கு வந்தார். அங்கு அவரது வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு மீன்வாங்க வந்த குப்புசாமியின் மனைவி, அவரை ஆட்டோவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் குட்டிவிவேக் மது அருந்தி விட்டு கடையை விட்டு வெளியே வந்த நிலையில் டாஸ்மாக் கடையின் முன்பு மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆட்டோவில் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றனர்.
இதில் குப்புசாமி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். குட்டிவிவேக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன்ன்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். மேலும் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையில் அங்கு திறக்கப்பட்டு இருந்த டாஸ்மாக்கடையும் உடனடியாக பூட்டப்பட்டது. சம்பவ இடத்திற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், உதவி கலெக்டர் (பொறுப்பு) பழனிவேல், தாசில்தார் சக்திவேல், டாஸ்மாக் தாசில்தார் தங்கபிரபாகரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 2 பேரும் டாஸ்மாக் பாரில் மது அருந்தியது தெரிய வந்தது. மேலும் அவர்கள் டாஸ்மாக் மது குடித்ததால் இறந்தனரா? அல்லது போலி மதுவை குடித்து இறந்தனரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தப்பட்டது.இதற்கிடையே அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் டாஸ்மாக் மேற்பார்வையாளர் முருகனை தாக்கினர். இதில் அவருக்கு மூக்கின் அருகே காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர் டாஸ்மாக் தாசில்தார் தங்கபிரபாகரனை, டாஸ்மாக் கடையில் தள்ளி பூட்ட முயன்றனர். அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழகத்தில் விஷ சாராயம் அருந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு 22 பேர் இறந்த நிலையில் தற்போது தஞ்சையில் டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று இரவு 10 மணிக்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தஞ்சையில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திய 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உயிரிழவந்தர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தடய அறிவியல் பரிசோதனைக்காக உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் உயிரிழந்த குப்புசாமி, விவேக் ஆகிய இருவர் உடலிலும் சயனைடு' கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த 2 பேரும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது போலீசார் விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என்று கூறினார்.