த.வெ.க. கொடியில் யானை: பகுஜன் சமாஜ் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்


த.வெ.க. கொடியில் யானை: பகுஜன் சமாஜ் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்
x

கோப்புப்படம் 

தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார்.

கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை தமிழக வெற்றிக் கழகம் தனது கொடியில் பயன்படுத்தி இருப்பதாக அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அதில் அரசியல் கட்சிக் கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது. எனவே, தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் யானையை சின்னமாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story