தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள் -மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் பேசினார்கள்.
அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) : தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆணையம் கூறி உள்ளது. அதனையும் இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவலர் முதல் ஐ.ஜி. வரையிலான உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
ஈசுவரன் ( கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி) :
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் யார் மீதெல்லாம் சந்தேகம் உள்ளது என்பது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தெளிவாக எழுதி கொடுத்து உள்ளார். மனிதாபிமானற்ற முறையில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். எதிர் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)
தூத்துக்குடியில் ஜாலியன் வாலாபாக் என்று கூறப்படும் அளவுக்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.ஐ.ஜி. முதல் உயர் அதிகாரிகள் வரை குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அனைவரையும் விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.
அப்போது இருந்த டி.ஜி.பி. தலைமை செயலாளர் ஆகியோர் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய தகவல்கள் தெரிவித்து இருப்பார்கள். ஆனால் அவர் துப்பாக்கி சூடு சம்பவம் எனக்கு தெரியாது என அப்போது தெரிவித்தார்.இதற்கு முழு பொறுப்பு எடப்பாடி பழனிசாமி தான். எனவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.) தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டின் போது போலீஸ் வேனில் படுத்துக்கொண்டே சுட்டு வீழ்த்தி உள்ளனர். இந்த தவறுக்கெல்லாம் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தமிழக அரசின் நடவடிக்கை அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதே கோரிக்கையை கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினார்கள்.
சட்டப் பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
இந்தப் பிரச்சனையை அப்போதைய அ.தி.மு.க. அரசு சரியாக கையாளவில்லை. மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டு அறிய அன்றைக்கு அந்த அரசு தயாராக இல்லை.
அது மட்டும் அல்லாமல் ஊர்வலமாக வந்த மக்கள் மீது பலத்தை பயன்படுத்தி கலைப்பதற்கு திட்டமிட்டார்கள். துப்பாக்கிச்சூடு திட்ட மிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து வெளியிட்டுள்ளது. 11 ஆண்கள் இரண்டு பெண்கள் என 13 பேர் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். 40 பேர் பலத்த காயங்களை அடைந்துள்ளனர்.
அன்றைய முதல்-அமைச்சர் பழனிசாமியின் எதேச்சதிகாரத்திற்கு அந்த சம்பவம் எடுத்துக்காட்டாய் உள்ளது. நானும் சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என பழனிசாமி கூறியது யாரும் மறந்திருக்க முடியாது.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க "கடப்பாரைய முழுங்கிட்டு கசாயம் குடிச்சிடுவாங்க"ன்னு அந்த அளவிற்கு மிகப்பெரிய பொய்யை அவர் அன்று சொல்லியுள்ளார்.
இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால் சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர், அப்போதைய டிஜிபி, அப்போதைய உளவுத்துறை ஐஜி ஆகியோர் தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களை நிமிடத்திற்கு நிமிடம் அன்றைய முதல்வரிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்கள். ஊடகங்களைப் பார்த்து தெரிந்துகொண்டேன் என்பது மிகத்தவறு.
அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லி விட்டது.
அந்த ஆணையம் நம்மால் அமைக்கப்பட்டது அல்ல. அவர்கள் அமைத்த ஆணையம்தான். ஒருவேளை அதை நாம் அமைத்திருந்தால், இதில் அரசியல் இருக்கிறது என்றுகூட சொல்லியிருக்கலாம். ஆனால், அவர்கள் அமைத்த ஆணையமே சொல்லியிருக்கிறது. நேற்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அறிக்கைகளுமே, அவர்கள் அமைத்த ஆணையங்களால் அளிக்கப்பட்ட அறிக்கைகளாகும். நாம் வந்து எந்த ஆணையமும் இதற்காக அமைக்கவில்லை.
நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் பக்கம் 252-ல் இது அம்பலம் ஆகி இருக்கிறது. ''தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'அந்தச் சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்' என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியும் அளித்திருக்கிறார். ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத் துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள். எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக அவர் கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும். இது ஆணையத்தின் அறிக்கையில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே, இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. கொடூரமான கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக நேரடி வர்ணனைகளை தனது அறையில் உட்கார்ந்து கேட்டுவிட்டு, வெளியில் வந்து 'எனக்கு எதுவும் தெரியாது' என்று சொன்னவர்தான் அன்றைக்கு முதல்வராக இருந்த பழனிசாமி. அவரது துரோகங்களும், தவறுகளும் அவரது அரசியல் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். புதிதாக நாம் எதையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் நான் இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கான தண்டனையின் தொடக்கத்தைத்தான் தேர்தல் தோல்வி மூலமாக அதிமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள்.
நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நம்முடைய திமுக அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அதைப்பற்றி இங்கே பேசிய பல உறுப்பினர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. போராட்டத்தின்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட 93 நபர்களுக்கு, அந்த நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனுபவித்த மனவேதனைகளைக் கருத்தில்கொண்டு, 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
இங்கேகூட பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவதைப் பற்றி அழுத்தத்தோடு சொன்னீர்கள். இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு, ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, மேலும், கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் 30-5-2018 அன்று இறந்த பரத்ராஜ் என்பவரின் தாயாருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. திரும்பப் பெற தகுதியுள்ள 38 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக "தடையில்லாச் சான்றிதழ்" வழங்குவதற்கு நாம் ஆணையிட்டோம். இவையெல்லாம் நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நடந்தவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் 26-5-2021 அன்று நாம் உத்தரவிட்டு, அந்த ஆணைகளை வழங்கியிருக்கிறோம்.
தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 நபர்களுக்கு கடந்த ஆட்சியில் கண்துடைப்பாக சில பணிகள் வழங்கப்பட்டன. அவர்கள் தங்கள் படிப்பு, தகுதிக்கு ஏற்ற பணிகளைக் கேட்டார்கள். அதைப்பற்றிக் கவலைப்படவேயில்லை, காதில் போட்டுக் கொள்ளவுமில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடனே, அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப பணியிடங்கள் 18 நபர்களுக்கு கடந்த 21-5-2021 அன்று வழங்கப்பட்டன.
விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையினை 18-5-2022 அன்று அரசிடம் அளித்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களை, அந்தப் பரிந்துரைகளை அரசு கவனமாக பரிசீலனை செய்தது; இன்னும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். கலவரம் ஏற்பட்டதற்கான காரணங்கள், கலவரத்தை கையாண்ட முறை, கலவரத்திற்குப் பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆணையத்தின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் அரசால் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த விசாரணை அறிக்கை குறித்து 29-8-2022 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் நாங்கள் விவாதித்தோம். அந்த அடிப்படையிலேதான் இந்த அவையில்கூட அந்த அறிக்கையை நாம் தாக்கல் செய்தோம். ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, இச்சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள்மீது துறைரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அந்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். அதனுடைய விவரத்தை இந்த அவைக்கு நான் இப்போது தெரிவிக்க விரும்புகிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர்மீது, துறைரீதியான நடவடிக்கை பொதுத் துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினை சேர்ந்த மூன்று வருவாய் துறை அதிகாரிகள்மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு & மேல்முறையீடு) விதிகளின் பிரிவு 17(B)–ன்கீழ் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.
உள்துறை மூலமாக, அப்போதைய தென் மண்டல காவல் துறைத் தலைவர், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணைக் காண்காணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு சார்-ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இதில் நேரடியாக ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த அவையினுடைய கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புகிறேன். இந்த ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்திலும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்பதையும் இந்த அவைக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஒரு ஆட்சி நிர்வாகம் இரக்கமற்று எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்தான், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி கொடூரம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நிர்வாகத்தை நடத்தக்கூடிய அதிகாரிகளாக இருந்தாலும், சட்டம்-ஒழுங்கைக் காக்கக்கூடிய காவலர்களாக இருந்தாலும், மனிதாபிமானம் கொண்டவர்களாக, மக்கள் சேவகர்களாக மட்டுமே நடந்து கொள்ள வேண்டுமே தவிர, வேறு மாதிரியாக நடந்து கொள்வது மனிதத் தன்மைக்கே விரோதமானது என்பதை உணர வேண்டும்.
அதிகாரமும், சட்டமும் மக்களைக் காக்கவே என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஏதோ இப்பொழுது சொல்கிற உறுதிமொழி அல்ல; ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிதான். யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதை மாத்திரம் தெரிவித்து, என்னுடைய விளக்கத்தை நிறைவு செய்கிறேன்" என்று கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள், முதல்-அமைச்சர் பேசிய போது ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.