மாதவரத்தில் சுரங்கம் தோண்டும் பணி: வேணுகோபால் நிலையத்தில் முதல் எந்திரம் வெளியே வருகிறது - மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தகவல்
சென்னையில் 2-ம் கட்டத்தில் முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் மாதவரத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) பணியை முடித்து கொண்டு வேணுகோபால் நகர் ரெயில் நிலையத்திற்கு வெளியே வருகிறது.
சென்னையில், 2-ம் கட்டமாக ரூ.61 ஆயிரத்து 841 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், மாதவரம்-தரமணி வரை பாதையில் சுரங்க ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்தப்பாதையில் மாதவரம்-பெரம்பூர், அயனாவரம்- கெல்லீஸ், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை - அடையாறு, அடையாறு- தரமணி, கொளத்தூர் - நாதமுனி என 6 தொகுப்புகளை பிரித்து பணிகள் நடந்து வருகிறது.
மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் முக்கியமான பணியான முதல் சுரங்கம் தோண்டும் பணியை கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி மாதவரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எஸ்.98 எண் கொண்ட ஆனைமலை என்ற பெயர் கொண்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் எந்திரம்) சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சுரங்கம் தோண்டும் பணியை முடித்து கொண்டு வேணுகோபால் நகர் ரெயில் நிலையத்தை இன்று (புதன்கிழமை) மாலை 4.15 மணி அளவில் வந்தடைகிறது.
தொடர்ந்து இந்த பாதையில் 2-வது சுரங்கம் தோண்டும் எந்திரம் பணியில் ஈடுபட்டு வருகிறது.
மாதவரம்- சிப்காட் வரை 47 கி.மீ. நீளம் அமையவுள்ள தடத்தில் 30 சுரங்க ரெயில் நிலையங்கள் உள்பட 50 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வர உள்ளன. சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரெயில் திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
வரும் 2026-ம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.