மெட்ரோ ரெயில் சேவைக்காக பனகல் பூங்கா- கோடம்பாக்கம் இடையே சுரங்கம் தோண்டும் பணி


மெட்ரோ ரெயில் சேவைக்காக பனகல் பூங்கா- கோடம்பாக்கம் இடையே சுரங்கம் தோண்டும் பணி
x

பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரை மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம் தோண்டும் எந்திரம் வருகிற அக்டோபர் மாதம் பணியை தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை

சென்னை,

விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் நிலையான பொதுப் போக்குவரத்து அமைப்பு தேவையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2-வது கட்டமாக 116.1 கிலோ மீட்டர் நீளத்தில் 119 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 45.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது வழித்தடம் மாதவரத்தில் இருந்து சிப்காட் வரையிலும், 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், 44.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5-வது வழித்தடம் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதில், 4-வது வழித்தடமான மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. மேல் மற்றும் கீழ் சுரங்கங்கள் இரண்டையும் கருத்தில் கொண்டு சுமார் 16 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை முழுவதையும் தோண்டுவதற்கு 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த பணியில் ஐ.றி.டி. சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம் ஈடுபடுகிறது.

சுரங்கம் தோண்டும் எந்திரத்தை தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள எச்.கே. தொழிற்சாலையில் நடந்தது. 700 மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த எந்திரம் பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு, தியாகராயநகர், பனகல் பார்க் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

சுரங்கம் தோண்டும் எந்திரத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் பனகல் பார்க் நிலையத்தில் நடந்து வருகிறது. வருகிற அக்டோபர் மாதத்தில் இந்த சுரங்கம் தோண்டும் எந்திரம் பணியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எந்திரம் பூமிக்கு அடியில் 85 அடி ஆழத்தில் கீழ்நிலையில் தொடங்கப்பட்டு, போட்கிளப், நந்தனம், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் வழியாக சுரங்கம் செய்யப்பட்டு இறுதியாக அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோடம்பாக்கம் மேம்பாலத்தை வந்தடையும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து போரூர் வரை தனியார் வாகன இணைப்பு சேவையை நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தொடங்கி வைத்தார்.


Next Story