மாநகராட்சி குப்பை கிடங்கில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிளீனர் பலி - வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே சோகம்


மாநகராட்சி குப்பை கிடங்கில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிளீனர் பலி - வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே சோகம்
x

மாநகராட்சி குப்பை கிடங்கில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் கிளீனர் பலியானார். வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இந்த சோகம் நேர்ந்துவிட்டது.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணம்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 27). இவர், சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் குப்பை லாரியில் தற்காலிகமாக கிளீனராக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு பேசின்பிரிட்ஜ் யானைக்கவுனி சாலையில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு குப்பையை கொட்ட சென்றது.

அங்குள்ள பள்ளத்தில் குப்பையை கொட்டுவதற்காக டிரைவர் சுதாகர்(52), லாரியை பின்னோக்கி ஓட்டி வந்தார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, குப்பைகளை கொட்டும் பள்ளத்தில் பின்புறமாக செங்குத்தாக கவிழ்ந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட டிரைவர் சுதாகர், கீழே குதித்து உயிர் தப்பினார். ஆனால் கிளீனர் தமிழ்ச்செல்வனால் கீழே குதிக்க முடியவில்லை. அதற்குள் பள்ளத்தில் விழுந்து லாரியின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாட்டில் சிக்கிய தமிழ்ச்செல்வன் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், இடிபாட்டில் சிக்கிய கிளீனர் தமிழ்ச்செல்வன் உடலை மீட்டனர். இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பலியான தமிழ்ச்செல்வனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்றுதான் அவர் ரூ.200 சம்பளத்துக்கு தற்காலிகமாக கிளீனர் வேலைக்கு சேர்ந்து உள்ளார். பணியில் சேர்ந்த முதல் நாளே அவர் விபத்தில் சிக்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story