வேளாண் பயிற்சிக்காக சென்ற திருச்சி பேராசிரியை இஸ்ரேலில் சிக்கித்தவிப்பு
இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல்
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தன்னாட்சி புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசி இஸ்ரேல் நகரங்களை ஹமாஸ் அமைப்பினர் திக்குமுக்காட வைத்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தாக்குதலை நடத்தி வருகிறது.
காசா எல்லையில் இஸ்ரேல் 3 லட்சம் வீரர்களை குவித்துள்ளது. மேலும், ராணுவ டாங்கிகள், ஆயுதங்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் காசா எல்லையில் குவித்துள்ளனர். லெபனான், சிரியா எல்லையில் அமைதி நிலவுகிறது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனாலும், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
84 தமிழர்கள் சிக்கித்தவிப்பு
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் பல இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதனால் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து உயர்படிப்புகளுக்காகவும், ஆராய்ச்சி படிப்புகளுக்காகவும் இஸ்ரேல் நாட்டிற்கு பலர் சென்று வருகிறார்கள். இஸ்ரேல்- பாலஸ்தீனத்துக்கு இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் உயர்படிப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக சென்றவர்களில் 84 தமிழர்கள் இஸ்ரேலில் தற்போது சிக்கி தவிக்கிறார்கள். இந்தநிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் இஸ்ரேல் நாட்டில் உள்ள 2 வேளாண் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு செய்து நீர்வள தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஆய்வு, ரிமோட் சென்சார் (ட்ரோன்) தொழில்நுட்பம் போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சார்பில் பல்வேறு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு சென்று வருவது வழக்கம்.
திருச்சி பேராசிரியை
அதன்படி, சொட்டு நீர்ப்பாசனம் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள திருச்சி வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை இணை பேராசிரியை ராதிகா, கடந்த மாதம் 23-ந் தேதி 2 மாத பயிற்சிக்காக இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்குரியன் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். அவர் சென்ற 3 வாரத்திலேயே திடீரென போர் தொடங்கியுள்ளது.
இதனால், அவர் தங்கி உள்ள இடத்தில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் உள்ளார். மேலும் அங்கிருந்து குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக திருச்சியில் உள்ள அவருடைய கணவரும், திருச்சி வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உழவியல் துறையின் தலைவருமான ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பேச முடியவில்லை
நானும், எனது மனைவி ராதிகாவும் திருச்சியில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். எனது மகன் சென்னையில் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறான். எனது மனைவி 2 மாத பயிற்சிக்காக இஸ்ரேல் நாட்டுக்கு கடந்த மாதம் 23-ந்தேதி சென்றுள்ளார். அங்கு பயிற்சி முடித்து விட்டு அடுத்த மாதம் இந்தியா திரும்ப திட்டமிட்டு இருந்தார். தற்போது, அவர் சென்ற 3 வாரங்களிலேயே அங்கு போர் தொடங்கி விட்டது. எனது மனைவியிடம் கடந்த 8-ந் தேதி வீடியோ காலில் பேசினேன். அப்போது, தொடர்ந்து வெடிகுண்டுகள், ராக்கெட்டுகளின் சத்தம் கேட்டு வருவதாகவும், இருப்பினும் தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். தற்போது, இணையதள சேவை முடங்கி விட்டதால் வீடியோ கால் பேச முடியவில்லை. குறுஞ்செய்தி மட்டுமே அவரால் அனுப்ப முடிகிறது. எனது மனைவி இருக்கும் இடத்தில் இருந்து தாக்குதல் நடந்த பகுதி 60 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது.
மீட்க கோரிக்கை
தொடர்ந்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்பதாகவும், இஸ்ரேல் அரசு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கும் நேரத்தில் முன்னெச்சரிக்கையாக அபாய ஒலியை எழுப்பும் என்றும், அப்போது அனைவரும் பாதுகாப்பாக பதுங்கு குழிக்குள் சென்று தங்கி கொள்வதாகவும், நிலைமை சரியானவுடன் தகவல் தெரிவிக்கும் போது, மீண்டும் அவர் தங்கி உள்ள அறைக்கு வந்துவிடுவதாகவும் கூறினார்.
மேலும், தன்னுடன் 10 இந்தியர்கள் தங்கி இருப்பதாகவும், குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருப்பதால், தனித்தனி அறையில் இருப்பதற்கு பயந்து, தூங்கும்போது அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்து இருப்பதாகவும் எனது மனைவி கூறியுள்ளார். தமிழகத்தில் இருந்து அயலக தமிழர் நலத்துறையில் இருந்து தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார்கள். மேலும் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மூலம் இஸ்ரேல் தூதரகத்துடன் பேசி உள்ளார். எனது மனைவியையும், அவருடன் உள்ளவர்களையும் பத்திரமாக மீட்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.