உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ். துறைமுக ஸ்டிக்கின்கள் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கப்பலில் இருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் 66 தீயணைப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் ஏப்ரல் 14-ந்தேதி தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தீயணைப்பு துறை தொடங்கப்பட்ட பின்பு கடந்த 2020-ம் ஆண்டு வரை மொத்தம் 33 தீயணைப்பு வீரர்கள் பணியின்போது வீரமரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு டெல்லி, கோவா, உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தீயணைப்பு வீரர் என மொத்தம் 3 பேர் பணியின்போது வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலர் ஹக்கீம் பாஷா, நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். வருகிற 20-ந் தேதி வரை தீ தொண்டு வார விழா "தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்" என்ற தலைப்பின் கீழ் கடைபிடிக்கப்படவுள்ளது. அப்போது மாவட்டம் முழுவதும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, தீ விபத்து, பேரிடர்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? என்பது குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்.
இதேபோல் குன்னம் அருகே உள்ள வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் வீரர்கள் சார்பில் தீ விபத்தில் இறந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மலர் வளையம் வைத்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். மேலும் பாதுகாப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை செயல் விளக்கம் ஆகியவற்றை வேப்பூர் பஸ் நிலையத்தில் பொது மக்களிடம் வீரர்கள் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.