கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை


கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை
x

கோப்புப்படம்

கருணாநிதியின் 101-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார்.

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நாளை 101-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணியளவில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் அவர், அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் முழு உருவச்சிலைக்கு காலை 9.15 மணியளவில் மாலை அணிவிக்கிறார். அங்கு கருணாநிதி உருவச்சிலைக்கு கீழே பூக்களால் அலங்கரித்து வைக்கப்படும் உருவப்படத்துக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்துகிறார்.

இதைத்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த உள்ளார்.

அதன்பின்னர், தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு காலை 10 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அங்கு கருணாநிதி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு கருணாநிதியின் சிலைக்கும், உருவப்படத்துக்கும் மரியாதை செலுத்த உள்ளனர்.

கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தி.மு.க. சார்பில் தொடர் நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Next Story