முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டில் பயணம்: ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை; பயணிகள் அதிருப்தி


முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டில் பயணம்: ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை; பயணிகள் அதிருப்தி
x

வடமாநில தொழிலாளர்களின் அதிக வரவால் நமக்கு பல்வேறு வேலைகள் நடந்தாலும் தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ரெயில் பயணங்களில் அவர்களின் செயல்கள் நம்மை எரிச்சல் அடைய செய்கின்றன.

சென்னை

தமிழ்நாட்டுக்கு தினமும் வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை அவர்கள் ஊடுருவி விட்டார்கள். பெரிய நிறுவனம் என்றாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அங்கிங்கெனாதபடி எங்கும் வேலை செய்கிறார்கள்.

ஒரு சிறு டீக்கடையை எடுத்துக் கொண்டாலும் கல்லாவில் இருப்பவரைத் தவிர, பலகாரங்கள் போடுவது, டீப்போடுவது, கிளாசுகளை கழுவுவதுவரை அவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கடும் உழைப்பாளிகள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதற்கு இணையாக உழைக்கத் தெரிந்த நம்மவர்கள் என்ன ஆனார்கள்? இலவசங்களால் கொஞ்சம் வயிற்றில் பசியாறிப் போவதால், சோம்பேறி ஆனார்கள். விளைவு நாம் செய்யவேண்டிய வேலைகளை, வடமாநிலத்தார் வந்து செய்கிறார்கள்.

கல்லாவை நம்மிடம் அவர்கள் கைப்பற்றாமல் இருந்தால், சரி.

தொல்லைகள்

அதேநேரம் வடமாநில தொழிலாளர்களின் அதிக வரவால் நமக்கு பல்வேறு வேலைகள் நடந்தாலும் தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

எடுத்துக்காட்டாக சொல்வது என்றால், ரெயில் பயணங்களில் அவர்களின் செயல்கள் நம்மை எரிச்சல் அடைய செய்கின்றன. பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது, வகுப்பு மாறி பயணம் செய்வது, சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் புகுந்து பயணம் செய்வது, பாக்குகளை வாயில் போட்டு குதப்பி கண்ட, கண்ட இடங்களில் உமிழ்வது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோதச் செயல்களை அச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

தாரக மந்திரம்

இதுகுறித்து அம்பத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி அனுஜா கூறும் போது, 'நமக்கு ஒதுக்கப்பட்ட முன்பதிவு செய்த பெட்டிகளில் உள்ள படுக்கைகளில் அமர்ந்திருக்கும் வடநாட்டினரை எழுந்திருக்கச் சொன்னால் அவர்கள் கேட்பதில்லை. இதற்கு மொழியும் தடையாக இருக்கிறது. அதில் சிலருக்கு பொது இடங்களில் பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்றும் தெரிவதில்லை. வாயில் போதை பாக்குகளை போட்டுவிட்டு ஜன்னல்களில் உமிழ்ந்து அசிங்கப்படுத்துவதுடன், சுற்றுப்புறத்தை சுகாதாரம் இல்லாமல் செய்கின்றனர். அதேபோல் அருகில் உள்ள இருக்கையில் இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பும் கேள்வி குறியாகி வருகிறது. ரெயில்வேயின் தாரக மந்திரமான சுத்தம், பாதுகாப்பு, நேரம் தவறாமை போன்றவற்றை பயணிகளுக்கு முறையாக கிடைக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

வடமாநில தொழிலாளர்கள்

தெற்கு ரெயில்வே முதன்மை பயணச்சீட்டு ஆய்வாளர் (ஓய்வு) ரவி கூறும் போது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண வகை டிக்கெட் வாங்கி இருப்பவர்களை பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதித்து, அடுத்த ரெயில் நிலையம் வந்ததும் அவர் வைத்திருக்கும் டிக்கெட்டுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிக்கு மாறச்செய்து பயணிக்க அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து டிக்கெட் பரிசோதகர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் கும்பலாக வரும் வடநாட்டு தொழிலாளர்கள் இறங்கிச் செல்ல டிக்கெட் பரிசோதகர்கள் கூறினாலும் அவர்கள் கேட்பதில்லை. இதனால் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் உதவியுடன் இறக்கி விடுகிறோம். இதனால் சில நேரங்களில் விரும்பத்தகாதப்படி டிக்கெட் பரிசோதகர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. தமிழ்நாடு மட்டும் அல்லாது வடமாநிலங்கள் செல்லும் ரெயில்களிலும் இவை அதிகரித்து வருகின்றன. எனவே இவற்றை முழுமையாக தடுக்க ரெயில்வே நிர்வாகம் தேவை இல்லாதவர்கள் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் பயணம் செய்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்தால்தான் முற்றிலும் தடுக்க முடியும். அரசும் வடநாட்டு தொழிலாளர்கள் வருகையையும் கட்டுப்படுத்த வேண்டும்' என்றார்.

பயணிக்க இயலவில்லை

குருவாயூர் விரைவு ரெயிலில் பயணித்த மதுரையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் மனோஜ் கூறும் போது, 'ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண வகை டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பயணிப்பது அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து மதுரைக்கு அடிக்கடி குருவாயூர் ரெயிலில் குடும்பத்துடன் கைகுழந்தையுடன் பயணித்து வருகிறேன். பகல் நேர ரெயிலாக இருந்தாலும் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கிறேன். ஆனால் சமீப காலமாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் உள்ள கழிவறை, வாசல்களில் அதிகளவு தரையில் அமர்ந்து வடநாட்டு தொழிலாளர்கள் பயணிக்கின்றனர். குறிப்பாக 72 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் சுமார் 150 பேர் வீதம் பயணிக்கின்றனர். இதனால் சவுகரியமாக பயணம் செய்ய விரும்பி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ரெயில் பயணத்தின் போது அசவுகரியங்கள் தான் ஏற்படுகின்றன. இதனால் குடும்பத்துடன் ரெயிலில் பயணிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை ரெயில்வே நிர்வாகம் வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

விரைவில் நிரந்தர தீர்வு

இந்திய ரெயில்வேயின் கீழ் செயல்படும் அகில இந்திய ரெயில் பயணிகள் நலவாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறும் போது, 'முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண வகை டிக்கெட்டுகளை வைத்திருக்கும் வடநாட்டுத் தொழிலாளர்கள் பயணம் செய்வதாக எங்கள் கவனத்துக்கு வந்து உள்ளது. வாராந்திர ரெயில்களில்தான் இந்த பிரச்சினை இருந்தது. தற்போது அனைத்து ரெயில்களிலும் இந்த பிரச்சினை இருப்பதாக பரவலாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக ரெயில்வே துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம். அவர்களும் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படையினர் இரவு நேர ரெயில்களில் மட்டுமே இருக்கிறார்கள், பகல் நேர ரெயில்களில் போலீசார் இருப்பதில்லை என்ற புகாரும் வந்து உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்' என்றார்.

பாதுகாப்புத்துறை அதிகாரி

இதுகுறித்து சென்னையில் ரெயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, 'ரெயில்களில் டிக்கெட் இல்லாமலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டும் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் ஏறி அனைத்து இருக்கைகளையும் வடநாட்டு தொழிலாளர்கள் ஆக்கிரமிக்கின்றனர். முறையாக டிக்கெட் வாங்கிப் பயணம் செய்யும் பயணிகளுக்கு உட்காரக்கூட இடம் கிடைப்பதில்லை. பயணிகளுடன் வடநாட்டு தொழிலாளர்கள் இடையூறு செய்வதுடன் அராஜகத்தில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்கள் எங்களுக்கு புகார் அளிக்கின்றனர். அதன் அடிப்படையில் வடநாட்டு தொழிலாளர்களை அடுத்த ரெயில் நிலையத்தில் 'நீ இறங்கி போ பையா' என்று கூறி இறக்கி விட்டு நடவடிக்கை எடுக்கிறோம். சமீபத்தில் கூட கேரளாவில் இருந்து ஜார்கண்ட் நோக்கி சென்ற ரெயில் சேலம் அருகே வந்த போது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக ரெயில்வே நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.

டிக்கெட் கட்டண சலுகை ரத்து; சேவையும் கேள்விக்குறி

மூத்த பயணிகள் ஆதங்கம்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட் கட்டண சலுகைகளை கொரோனாவிற்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது யாராக இருந்தாலும் முழுக் கட்டணத்தில்தான் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. அதுவும் குறிப்பாக தட்கல், பிரீமியம் தட்கல் என்ற முறையில் ஆம்னி பஸ்களில் விதிக்கப்படும் கட்டணம் போன்று கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் உயர்த்தி வசூலித்து வருகிறது. வேறுவழியின்றி முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் அதிகக் கட்டணம் செலுத்தி ரெயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால் கட்டணத்தை முழுமையாக பெறும் ரெயில்வே நிர்வாகத்தால் ஏன் முழுமையான சேவையை வழங்க முடியவில்லை. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்தும் ரெயிலில் முறையாகப் பயணிக்க முடியாத நிலைக்கு யார் காரணம்? இதற்கு எப்போது ரெயில்வே நிர்வாகம் தீர்வு காணப்போகிறது என்று சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து வடநாட்டு ரெயிலில் பயணம் மேற்கொண்ட மூத்த பயணிகள் சிலர் முணுமுணுத்து சென்றனர்.


Next Story