லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பலி


லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பலி
x

லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி பெண் மருத்துவ பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை,

நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சரணிதா (32). கடந்த 2016 ஆம் ஆண்டு டாக்டர் உதயகுமார் என்பவரிடம் திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. உதயகுமார் கோயம்புத்தூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சரணிதா மேற்படிப்பு (எம்.டி) இறுதி ஆண்டை முடித்து 25 நாட்கள் பயிற்சிக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக இருந்து வந்தார். பயிற்சிக்காக வந்த சரணிதா அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வந்தார்.

இந்த நிலையில், சரணிதா தனது கணவரிடம் பேசிவிட்டு காலை டிபன் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். உதயகுமார் தனது மனைவிக்கு மதியம் போன் செய்துள்ளார். சரணிதா போன் எடுக்காததால் பெண்கள் விடுதியில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்யும் கமலா என்பவரை அழைத்து அறைக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

அறைக்குள் இருந்த சரணிதாவிடம் இருந்து பதில் ஏதும் வராததால் இது குறித்து காவல் கட்டுப்பாட்டுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது டாக்டர் சரணிதா லேப்டாப் சார்ஜரை பிடித்தப்படி இறந்து கிடந்தார்.

அதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சரணிதா லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது சார்ஜர் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story