மாயனூர் ரெயில்வே கேட்டில் வாகன நெரிசல்
மாயனூர் ரெயில்வே கேட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கரூர்-திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டி மாயனூர் கதவணை செல்லும் சாலை வளைவில் ரெயில்வே கேட்டு உள்ளது. இந்த வழியாக கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 3 மாவட்ட மக்கள் தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். அதே வேலையில் கரூர்- திருச்சி இருப்பு பாதை வழித்தடத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்கள் அதிகமாக சென்று வருகின்றன. இதனால் மாயனூர் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கேட்டின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. இந்த ரெயில்வே கேட் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் இருப்பதால் கேட் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படும் போது வாகன நெரிசல் ஏற்பட்டு நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றன.
நேற்று மதியம் சரக்கு ரெயில் கடந்து செல்வதற்காக கேட் மூடப்பட்டு மீண்டும் திறந்த போது அதிகளவில் கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் ரெயில்வே கேட் பகுதியை கடக்க முயன்றதால் நெரிசலில் சிக்கின. இதனால் நெடுஞ்சாலையில் வந்த பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியாமல் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்தனர்.