நெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம்
நெல்லை டவுனில் புதிய வாய்க்கால் பாலம் கட்டப்பட உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவிலில் இருந்து காட்சிமண்டபம் வரையிலான சாலையில் அரசடி விநாயகர் கோவில் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள வாய்க்கால் பாலம் முழுமையாக அகற்றப்பட்டு, புதிதாக பாலம் அமைக்கப்பட உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி சந்திப்பிள்ளையார்கோவில் முதல் காட்சிமண்டபம் வரை செல்லும் இருசக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் சந்திப்பிள்ளையார் கோவிலில் இருந்து கணேஷ் தியேட்டர், தெற்கு மவுண்ட் ரோடு வழியாக காட்சி மண்டபம் செல்ல வேண்டும். சந்திப்பிள்ளையார் கோவில் முதல் கணேஷ் தியேட்டர் வரை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் கணேஷ் தியேட்டரில் இருந்து சந்திப்பிள்ளையார் கோவில் செல்லும் வாகனங்கள் லட்சுமி மகால், குளப்பிறை தெரு, வாகையடிமுனை வழியாக சந்திப்பிள்ளையார் கோவில் செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்பின்னர் 24-ந்தேதியில் (திங்கட்கிழமை) இருந்து நிரந்தரப்படுத்தப்படும். இதுகுறித்து ஏதாவது ஆலோசனை இருப்பின் பொதுமக்கள் 0462-2562651 என்ற காவல் கட்டுப்பாட்டு எண்ணில் தெரியப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.