விதிகளை மீறி நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்
கம்பத்தில் விதிகளை மீறி நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கம்பம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து சிக்னலில் இருந்து காளியம்மன் கோவில் வரை உள்ள நகரின் பிரதான சாலையில் ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி, குமுளி மார்க்கமாக கம்பம் புதிய பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து பஸ்களும் ஏ.கே.ஜி. திடல் வழியாக செல்கின்றன. இதேபோல் தேனி, குமுளி மார்க்கமாக புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் மாரியம்மன் கோவில், பழைய பஸ் நிலையம், சிக்னல் வழியாக சென்று வருகின்றன.
இந்தநிலையில் ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிக்னல் வரை பஸ் செல்லக்கூடிய சாலையில் விதிகளை மீறி ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் நிறுத்தும் ஆட்டோ டிரைவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.