போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?


போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
x

நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நாமக்கல்

நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை கொண்டது ஆகும். இந்த நகராட்சி பகுதியில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சியில் மலைகோட்டையையொட்டி 27 பஸ் நிறுத்தங்களை கொண்ட பஸ் நிலையம் 3.77 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இது போதுமானதாக இல்லை. எனவே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதேபோல் சாலை கட்டமைப்பு வசதிகளும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப இல்லை என்பதும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாக இருந்து வருகிறது. பூங்கா சாலை உருவாகும் முன்பு நகரில் எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். ஆனால் பூங்கா சாலை, பொய்யேரிக்கரை சாலை விரிவாக்கம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு சாலை அமைக்கப்பட்ட பிறகு போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறைந்து உள்ளது.

ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு

இருப்பினும் பூங்கா சாலையில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் இருந்தால், அந்த சாலையை போலீசார் தடை செய்து விடுகின்றனர். அந்த நேரங்களில் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தினசரி, கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இந்த சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளதால், வெளியூரை சேர்ந்த நபர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்து செல்கிறார்கள். எனவே அங்கு போக்குவரத்து நெரிசல் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்களை பொய்யேரிக்கரை சாலை வழியாக திருப்பி விட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதேபோல் ஊர்வலங்கள் நடத்தப்பட்டாலும் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விடுகிறது. எனவே ஊர்வலங்களை குறிப்பிட்ட ஒரு சாலையில் மட்டும் நடத்த அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் பஸ்நிலையத்தில் வாகனங்கள் நுழையும் இடத்தில் போக்குவரத்தை மாற்றி அமைத்தால் நெரிசல் குறைய வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுற்று வட்டச்சாலை

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முதலைப்பட்டியில் புதிய புறநகர் பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 12.90 ஏக்கர் நிலம் நகராட்சி சார்பில் வாங்கப்பட்டது. இந்த இடத்தில் சுமார் ரூ.36 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் பஸ்நிலைய கட்டுமான பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் 3 மாதங்களில் இப்பணி முடிவடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சுற்று வட்டச்சாலையில் இருந்தே புதிய பஸ்நிலையத்திற்கு இணைப்பு சாலை இருப்பதால், சுற்று வட்டச்சாலை அமைக்கும் பணியையும் உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story