பழனி கோவில் அதிகாரியை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம்


பழனி கோவில் அதிகாரியை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம்
x

பழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோவில் அதிகாரியை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி,

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கும்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். அவ்வாறு விரதம் இருந்து சபரிமலைக்கு சென்றுவரும் பக்தர்கள், பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் வெளியூர், வெளிமாநில அய்யப்ப பக்தர்கள் பழனிக்கு அதிக அளவில் வருகின்றனர். இவர்கள் பழனி மலையை சுற்றி கிரிவலம் வரும்போது கிரிவீதிகளில் உள்ள கடைகளில் பஞ்சாமிர்தம், இனிப்பு பலகாரங்கள், சாமி படங்கள் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்.

அய்யப்ப பக்தர்கள் வருகை எதிரொலியாக பழனி கிரிவீதிகளில் தள்ளுவண்டி, கூடைகளில் சாமி படங்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். மேலும் வெளிமாநில வியாபாரிகளும் முகாமிட்டு பொருட்ளை விற்கின்றனர்.

அதிகாரி சிறைபிடிப்பு

பக்தர்கள் வருகை அதிகரித்ததன் எதிரொலியாக கிரிவீதிகளில் கோவில் சார்பில் அவ்வப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. அதன்படி நேற்று காலை கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையிலான அதிகாரிகள் பழனி கிரிவீதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். முன்னதாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் மேற்கு கிரிவீதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் திடீரென்று உதவி ஆணையர் லட்சுமி வந்த காரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது, சீசன் காலத்தில் மட்டும்தான் பழனி அடிவாரத்தில் வியாபாரம் உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றுவதால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி அடிவாரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் உதவி ஆணையர் லட்சுமி மற்றும் போலீசார், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று கூறினர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் பழனி அடிவாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story