மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு:இழப்பீடு கேட்டு தொழிற்சங்கத்தினர், உறவினர்கள் சாலை மறியல்
திருவாரூரில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். இதற்கு உரிய இழப்பீடு கேட்டு தொழிற் சங்கத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூரில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். இதற்கு உரிய இழப்பீடு கேட்டு தொழிற் சங்கத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின் ஊழியர் சாவு
திருவாரூர் மின்வாரிய அலுவலகத்தின் நகர பிரிவில் கேங் மேனாக பணியாற்றி வந்தவர் தமிழரசன் (வயது35). இவர் நேற்று முன்தினம் மாலை திருவாரூர் பேபி டாக்கீஸ் சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்றில் ஏறி அப்பகுதியில் ஏற்பட்டிருந்த மின்சார வினியோக குளறுபடியை சீரமைப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தின் அருகே சென்ற உயர் அழுத்த மின் கம்பி உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
தமிழரசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் மின்வாரியத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு அருள்மொழி என்கிற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த துயர சம்பவம் குடும்பத்தினர், மின் ஊழியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த தமிழரசன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று திருவாரூர் மின்சார வாரிய அலுவலகம் அருகில் உள்ள கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதில் சி.ஐ.டி.யூ. தொழிற் சங்க மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் இக்பால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், மின்வாரிய செயற் பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து திருவாரூர் விளமல் கல்பாலம் நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்த நிலையில் மீண்டும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை என கூறி தொழிற்சங்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. அடுத்தடுத்து நடந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர் பகுதியில் நேற்று 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.