வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் - மலைச்சாலைகளில் கடும் வாகன நெரிசல்
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் மலைச்சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
கொடைக்கானல் ஒரு குளுமை நிறைந்த சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் கோடை சீசன் தொடங்கியதை தொடர்ந்தும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததை தொடர்ந்தும், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது..
இந்த நிலையில், வாரவிடுமுறை நாளான இன்று வழக்கத்தை விட சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து பெருமாள்மலை, புலிச்சோலை, வெள்ளி நீர் வீழ்ச்சி, சோதனை சாவடி உள்ளிட்ட மலைச்சாலைகளிலும், உகார்த்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட நகர்பகுதிகளிலும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலாப்பயணிகளின் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காத்திருந்து ஊர்ந்தபடி செல்கின்றன.
இதனால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மலைச்சாலையில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் காத்திருந்து செல்வதால் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கழிப்பறை இல்லாமல் பெரும் அவதியடைந்து வருவதாக சுற்றுலாப்பயணிகளால் கூறப்படுகிறது.
இதில் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி மலைச்சாலைகளில் ஆங்காங்கே கழிப்பறை மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.