காய்கறி கண்காட்சி நிறைவு பெற்ற பிறகும் கோத்தகிரி நேரு பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்-புகைப்படம், செல்பி எடுக்க ஆர்வம்
கோத்தகிரியில் நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நிறைவு பெற்ற பிறகும் கூட நேரு பூங்காவைக் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் தொடந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். மேலும் புகைப்படம், செல்பி எடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கோத்தகிரி
கோத்தகிரியில் நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நிறைவு பெற்ற பிறகும் கூட நேரு பூங்காவைக் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் தொடந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். மேலும் புகைப்படம், செல்பி எடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
காய்கறி கண்காட்சி நிறைவு
நீலகிரி மாவட்டத்தின் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி கடந்த 6 மற்றும் 7-ந் தேதி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவர சுமார் 4 டன் காய்கறிகளினால் ஆன சோளம் மற்றும் கம்பு கதிர் சிற்பங்கள், ஊட்டி நகர் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ஊட்டி 200 சிற்பம், டிராகன், யானைகள், முதலை, மயில்கள், சிவலிங்கம், மயில் பவானி சாகர் அணை, மலபார் பைட், ஹார்பில், போன்ற உருவங்கள் செய்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த காய்கறி கண்காட்சியை 2 நாட்களில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மேலும் நீலகிரியில் கோடை விழா தொடங்கியுள்ளதாலும், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நிறைவு பெற்றாலும், அங்கு அமைக்கப்பட்ட முக்கிய காய்கறி சிற்பங்கள் சில அகற்றப்படாமல் உள்ளன. அந்த சிற்பங்களை காணவும், பூங்காவில் மலர்ந்துள்ள வண்ண மலர்களை கண்டுகளிக்கவும் கடந்த இரு தினங்களாக சுற்றுலாப் பயணிகள் தொடந்து பூங்காவிற்கு வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் செல்பி ஸ்பாட்களில் நின்று ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துச் செல்கிறார்கள்.