கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். கொடைக்கானல், வட்டக்கானல், பாம்பார்புரம், வெள்ளக்கவி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் அருவிக்கு தண்ணீர் வரத்து ஏற்படும்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 12-ந்தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்த நிலையில், மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சற்று குறைந்து காணப்பட்டது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் குளிக்கும் வகையில், அருவியில் தண்ணீர் மிதமான அளவு விழுந்தது. இதனையடுத்து அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, 14 நாட்களுக்கு பிறகு வனத்துறையினர் நேற்று நீக்கினர். தடை நீக்கப்பட்டதால், கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக வந்திருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவியை சுற்றி பார்க்கவும் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.


Next Story