கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி: ஒரு கிலோ ரூ.7-க்கு விற்பனை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.7-க்கு விற்பனை ஆனது.
சென்னை,
தக்காளி விலை கடந்த ஜூலை மாதத்தில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்த மழை காரணமாக விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து விலை அதிகரித்திருந்தது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ கடந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. கடந்த மாதம் 2-ந்தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்கப்பட்டது.
அப்போது வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-ஐ கடந்தும் விற்பனை ஆனது. தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகள், ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்தது.
கடும் வீழ்ச்சி
இப்படி விலை அதிகரித்து, இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்த, தங்கம் போல பாதுகாக்கப்பட்ட தக்காளி வரத்து அதிகரித்த பின், விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 9-ந்தேதி 100-க்கு கீழ் வந்தது.
அதன் பின்னரும் விலை சரிந்து கொண்டே வந்து, தற்போதைய நிலையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. விளைச்சல் அதிகரிப்பால், வரத்து அதிகரித்து, தக்காளி விலை ஒவ்வொரு நாளும் சரிந்து கொண்டே வருகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.7 முதல் ரூ.18 வரை விற்பனை ஆனது. மேலும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
அவலநிலை
தக்காளி விளைச்சல் நன்றாக இருந்தாலும் உரிய விலை கிடைக்காததால், கடந்த மாதம் வரை பொத்தி பொத்தி பாதுகாத்த விவசாயிகள் பலர், அதனை தற்போது சாலை ஓரங்களில் கொட்டும் அவல நிலையும் அரங்கேறுகிறது.
தக்காளி விலையை போல, பிற காய்கறி வகைகளின் விலையும் குறைந்து தான் காணப்படுகிறது. சின்ன வெங்காயம், இஞ்சி, பீன்ஸ், பச்சைப் பட்டாணியை தவிர மற்ற காய்கறி வகைகள் ஒரு கிலோ ரூ.30-க்குள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை ஆனது.