வரத்து அதிகரிப்பால்பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவுகிலோ ரூ.6-க்கு விற்பனை


வரத்து அதிகரிப்பால்பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவுகிலோ ரூ.6-க்கு விற்பனை
x
தினத்தந்தி 8 Sept 2023 12:30 AM IST (Updated: 8 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வரத்து அதிகரிப்பால் பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிந்து கிலோ ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்து ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனையாகிறது.

தக்காளி சாகுபடி

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பெல்ரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகள் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்,

இங்கு வெளி மாவட்ட வியாபாரிகள் வந்திருந்து தக்காளியை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதங்களில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை எட்டியது. தற்போது தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை கிலோ 8 முதல் 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

விலை வீழ்ச்சி

மேலும் வெளிமாநில தக்காளிகள் வர தொடங்கி உள்ளதாலும், உள்ளுர் தக்காளி வரத்து அதிகரித்ததாலும் தக்காளி விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 15 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி 6 முதல் 7 ரூபாய்க்கும் விற்பனையானது.

வரத்து தொடர்ந்து அதிகரித்தால் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story