சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தக் கூடாது - திருமாவளவன் வலியுறுத்தல்


சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தக் கூடாது - திருமாவளவன் வலியுறுத்தல்
x

கோப்புப்படம் 

இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை முகமையினால் பராமரிக்கப்படும் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றுள் 25 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டணம் உயர்த்தப்படவுள்ள சுங்கச்சாவடிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி சுங்கச்சாவடிகளும்; ஓமலூர், சமயபுரம், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளும் அடங்கும். இந்த சுங்கக் கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். இறுதியில் இந்த கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள்தாம். ஏற்கனவே பல்வேறு விதமான வரிகளை சுமத்தி ஏழை, எளிய மக்களை கசக்கிப் பிழியும் மத்திய பா.ஜ.க. அரசு சுங்கச்சாவடி கட்டணங்களின் மூலமாகவும் பொதுமக்களைத் துன்புறுத்தி வருகிறது. இந்நிலையில் மேலும் கட்டணத்தை உயர்த்துவது அநீதியானது.

கடந்த 2023 -24-ம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலமாக 4,221 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக சுங்கச் சாவடிக் கட்டணங்கள் வசூலிக்கப்படும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. சுங்கச்சாவடிகள் அமைப்பது அவற்றில் கட்டணம் வசூலிப்பது ஆகியவற்றை 'தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள்-2008 வரையறுத்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் சுங்கச்சாவடிகள் பல இந்த விதிகளுக்குப் புறம்பாக உள்ளன. இதை நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுப்பிய போது விதிமுறைக்குப் புறம்பான சுங்கச்சாவடிகள் மூடப்படும் என மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்தார். இதே பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சரைச் சந்தித்த தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடத்திலும் இதே விதமான உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த உறுதிமொழிகளை இந்திய மத்திய அரசு இதுவரை செயல்படுத்தவில்லை.

பயனாளர்களுக்கு உதவிடும் வகையில் சாலைகளைச் சிறப்பாகப் பராமரிப்பதற்காகவே இந்த சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் நிலை கிராம சாலைகளை விட மோசமாக உள்ளது. சாலைகளைச் சரியாகப் பராமரிக்காத மத்திய அரசுக்கு கட்டணம் வசூலிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, இந்தக் கட்டண உயர்வை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்த சுங்கச்சாவடிகளில் பல பா.ஜ.க.வுக்கு நெருக்கமான நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. ஒப்பந்தத்துக்கான நிபந்தனைகள் நிறைவடைந்த பிறகும்கூட பல சுங்கச்சாவடிகளில் தனியார் கட்டண வசூல் தொடர்கிறது. அதை மத்திய அரசு தெரிந்தே அனுமதிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது இந்த சுங்கச்சாவடிகள் பா.ஜ.க.வுக்கு நிதி வசூல் செய்வதற்கான மறைமுக ஏற்பாடோ என்ற ஐயம் எழுகிறது.

சாலை வசதியென்பது ஒரு அரசு குடிமக்களுக்கு செய்து தர வேண்டிய அத்தியாவசிய வசதியாகும். அது ஆடம்பரம் அல்ல. அந்த அத்தியாவசிய வசதியை செய்து தருவதற்கு இப்படி குடிமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் கொடுமை ஒரு ஜனநாயக நாட்டில் தொடரக்கூடாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 'காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் ஒழிக்கப்படும்' என வாக்குறுதி அளித்தன. மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டே அந்த வாக்குறுதி முன்வைக்கப்பட்டது. இதை மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.

'இன்சூரன்ஸ் பிரிமியத்தின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கக்கூடாது' என மனிதநேயத்தோடு நிதி அமைச்சருக்குக் கடிதம் எழுதிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story