மக்களின் குறைகளை கண்டறிய காஞ்சீபுரம் மாநகராட்சியில் கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை மையம் - மேயர் தொடங்கி வைத்தார்


மக்களின் குறைகளை கண்டறிய காஞ்சீபுரம் மாநகராட்சியில் கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை மையம் - மேயர் தொடங்கி வைத்தார்
x

காஞ்சீபுரம் மாநகராட்சியில் மக்களின் அடிப்படை வசதிகளின் குறைகளை கண்டறிய கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் பெருநகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 51 வார்டுகளில் நாள்தோறும் பல லட்சம் டன் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் கையாண்டு வருகிறது. மேலும் மாநகராட்சியில் உள்ள மக்களின் குடிநீர், பாதாள சாக்கடை, தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்டவைகள் குறித்த குறைகளை தெரிவிக்க திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மனுவாக அளித்து தீர்வு கண்டு வருகின்றனர்.

மேலும், இதை துரிதப்படுத்தும் நோக்கில் காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் 1800 425 2801 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட மக்கள் குறைதீர் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மையத்தை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர், எம்.பி., க.செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் மகாலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர். இது குறித்து மேயர் மகாலட்சுமி கூறுகையில்:-

காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளுக்கு 1800 425 2801 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணை பயன்படுத்தி தொடர்புகொண்டு குறைகள் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக அந்த குறைகளை பதிவு செய்யப்பட்டது என குறுஞ்செய்தியாக குறைகளை தெரிவித்த நபருக்கு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சென்றுவிடும். மேலும், அந்த குறைகளை கண்டறிந்து சரிசெய்து முடித்த பின்னர் மக்களுக்கு தொடர்பு கொண்டு சரிசெய்யப்பட்டுவிட்டது எனவும் தெரிவிக்கப்படும்.

மழைக்காலங்களில் 24 மணிநேரமும் செயல்படும் வகையிலும் செயல்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அடிப்படை தேவைகளான தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதாளசாக்கடை, தூய்மை பணி, கொசு மருந்து தெளித்தல், மழைநீர் வடிகால்வாய், சாலை பராமரிப்பு பணி உள்ளிட்ட பல தேவைகள் இந்த சேவை மையம் மூலம் தீர்த்து வைக்கப்படும். மேலும், 48 மணிநேரத்தில் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் குறைகள் சரிசெய்யப்படும் என உறுதி அளித்தார். குறிப்பிட்ட நேரத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story