தேனி மாவட்டத்துக்குகேரள மருத்துவ கழிவுகளை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை:கலெக்டர் எச்சரிக்கை
தேனி மாவட்டத்துக்கு கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
மருத்துவ கழிவுகள்
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கேரள மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் மற்றும் நகராட்சி திடக்கழிவுகள் தமிழக எல்லைப்புற கிராமங்களில் கொட்டப்படுவதை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீஸ் துறையுடன் இணைந்து சோதனை சாவடி அமைத்து கழிவுப்பொருட்கள் கொண்டு வரப்படுவது கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு சட்டவிரோதமாக தமிழக எல்லைகளில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளால் நீர்நிலைகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. அத்துடன் நோய் பரவுதலை ஊக்குவிக்கிறது.
எனவே சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் செய்யலாம்
தேனி மாவட்டத்தில் கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், திடக்கழிவுகள் போன்றவை கொண்டு வந்து கொட்டப்படுவது தெரியவந்தால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கலாம்.
இதுதொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டருக்கு 04546-253676 என்ற தொலைபேசி எண் அல்லது collrthn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், போலீஸ் சூப்பிரண்டுவுக்கு 04546-254100 என்ற தொலைபேசி எண் அல்லது spofficethenidist@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் செய்யலாம். மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு 04546-264426 என்ற தொலைபேசி எண் அல்லது deeten@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.