திருவள்ளூர் நகராட்சி 22- வது வார்டில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


திருவள்ளூர் நகராட்சி 22- வது வார்டில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x

திருவள்ளூர் நகராட்சி 22- வது வார்டில் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

தொற்றுநோய்

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 22 -வது வார்டில் தந்தை பெரியார் சாலையில் தேவாநகர் அருகே பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலையொட்டி சாலையின் நடுவே புதைக்கப்பட்டிருக்கும் கழிவு நீர் குழாயில் இருந்து மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஓடி கொண்டிருக்கும் இந்த கழிவு நீரால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு துர்நாற்றம் வீசி கொசுக்கள் பெருகி பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கழிவு நீரை கடந்து செல்ல வேண்டி சூழ்நிலை உள்ளது. சில நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லக்கூடியவர்கள் மீது கழிவுநீர் பட்டு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் முகம் சுளித்து கொண்டு செல்கின்றனர்.

கோரிக்கை

மழை பெய்தால் மழை நீருடன் இதில் இருந்து வெளியேறும் இந்த கழிவுநீர் கலந்து சாலையில் ஓடி பக்கத்தில் உள்ள நிலத்தில் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. கழிவுநீர் குழாயில் இருந்து வெளியேறுவதை தடுக்க பொதுமக்கள் திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் திறந்த நிலையில் கழிவுநீர் வெளியாகி கொண்டிருக்கும் இடத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story