திருப்பூர்: அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து நூல் வியாபாரியிடம் ரூ.1.69 கோடி அபேஸ்
4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணத்தை அபேஸ் செய்த கும்பலை போலீசார் தேடினார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் தாராபுரம் ரோடு குமரன்நகர் பகுதியை சேர்ந்தவர் அங்குராஜ் (வயது 52). இவர் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே நூல் கமிஷன் கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த நூல் புரோக்கர் துரை என்கிற அம்மாசை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குராஜின் வாட்ஸ்அப் எண்ணுக்கு விஜயகார்த்திக் என்ற நபர் தொடர்பு கொண்டு பேசினார். தான், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவர் என்றும், வியாபார ரீதியாக வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம், எனது நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருப்பில் உள்ளது என்றும் கூறினார்.
மேலும், எனது நிறுவனத்தின் பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற ஊர்களில் கட்டுமான பணி நடக்கிறது. கட்டுமான பொருட்கள் மற்றும் இதர செலவுக்கு ரொக்கமாக பணம் தேவைப்படுகிறது. நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு 2 மடங்கு தொகையை ஆன்லைனில் உங்கள் (அங்குராஜ்) வங்கிக்கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்து வைப்பதாக கூறியுள்ளார்.
அதிகப்படியான பணத்துக்கு ஆசைப்பட்டு, அங்குராஜ் மற்றும் அம்மாசை இருவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்த நபர்களிடம் பணத்தை பெற தொடங்கினார்கள். அவ்வாறு ரூ.1 கோடியே 69 லட்சத்தை சேர்த்தனர். பின்னர் அந்த பணத்தை அங்குராஜின் கடையின் மேஜையில் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்து வீடியோ எடுத்து அதை விஜயகார்த்திக் கொடுத்த செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் 30-ந் தேதி அனுப்பி வைத்தனர்.
இந்த வீடியோவை அனுப்பி வைத்த சிறிது நேரத்தில் அங்குராஜின் கடைக்கு கார்களில் ஒரு கும்பல் திபுதிபுவென நுழைந்தது. தாங்கள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் என்றும், இந்த கடையில் கணக்கில் இல்லாத கருப்பு பணம் கைமாறுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சோதனை நடத்த வந்துள்ளதாகவும் கூறி கடையை சோதனையிட்டனர். இதனால் செய்வதறியாது அங்குராஜ் தவித்தார்.
அப்போது கடைக்குள் இருந்த ரூ.1 கோடியே 69 லட்சத்தை அவர்கள் எடுத்தனர். பின்னர் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சேமித்து வைக்கும் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் கையோடு கழற்றி எடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான கணக்கு விவரங்களை காண்பித்து பணத்தை பெற்றுச்செல்லலாம். இதற்காக கடந்த 2-ந் தேதி சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கூறிவிட்டு சென்று விட்டனர்.
அதன்பிறகே, அமலாக்கத்துறையினர் போல் நடித்து தன்னை ஏமாற்றி அந்த கும்பல் பணத்தை எடுத்துச்சென்றது அங்குராஜ்க்கு தெரியவந்தது. பின்னர் அன்று இரவு திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் அங்குராஜ் புகார் கொடுத்தார். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் தெற்கு போலீஸ் துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணத்தை அபேஸ் செய்த கும்பலை தேடினார்கள்.
இந்தநிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை நேற்று போலீசார் பிடித்தனர். அவர்கள் நாமக்கல் மாவட்டம் கல்லாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (37), சென்னை தாம்பரத்தை சேர்ந்த சுரேந்திரநாத் என்கிற குப்தா (45), கோவை சுண்டக்காமுத்தூர் ராமசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் (39), கோவை டாடாபாத்தை சேர்ந்த லோகநாதன் (41), சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கோபிநாத் (46) ஆகியோர் ஆவார்கள்.
ஜெயச்சந்திரன் தனது பெயரை விஜயகார்த்திக் என்று கூறி அங்குராஜிடம் பேசியுள்ளார். அதுபோல் சுரேந்திரநாத் தனது பெயரை நரேந்திரநாத் என்று கூறி பேசி வந்துள்ளார். இவர்களில் ராஜசேகர், சுரேந்திரநாத் ஆகியோர் இதுபோல் மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து 5 பேரிடம் இருந்து ரூ.88 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அபேஸ் செய்த பணத்தில் சுரேந்திரநாத் ரூ.15 லட்சத்து 57 ஆயிரத்தில் ஒரு சொகுசு கார், ஜெயச்சந்திரன் ரூ.5 லட்சத்தில் சொகுசு கார், 3 விலையுயர்ந்த செல்போன்கள் வாங்கியுள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.22 லட்சத்து 18 ஆயிரத்து 700 ஆகும். அவை அனைத்தையும் போலீசார் மீட்டனர்.
மொத்தத்தில் 5 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்து 84 ஆயிரத்து 700 மதிப்புள்ள களவு சொத்து மீட்கப்பட்டன. இதுபோல் இந்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காரையும் போலீசார் மீட்டனர். பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 5 பேரை தேடி வருகிறார்கள்.