திருவள்ளூரில் திரவுபதி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்
திருவள்ளூரில் திரவுபதி அம்மன் கோவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள பஞ்சபாண்டவர் சமேத திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
இந்த விழாவில் 16 நாட்கள் திருமுருக கிருபானந்த வாரியார் சீடர் லதா கதிர்வேல் குழுவினரின் மகாபாரத சொற்பொழிவுகளும் தினந்தோறும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று திரவுபதி அம்மன் அர்ஜூனன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கோவிலில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரவுபதி அம்மன் அர்ஜூனன் சாமி மண்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 7-ந் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.