திண்டிவனம் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேர் படுகாயம்


திண்டிவனம் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:46 PM GMT)

சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி திண்டிவனம் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்து நடந்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சஞ்சீவிராயன் பேட்டையை சேர்ந்தவர் சந்திரன் (வயது 38.). இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராகவும் 28-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் காரில் புதுச்சேரி நோக்கி சென்றார். காரில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35), சண்முகம் (30), கார்த்திக் (28) ஆகியோரும் சென்றனர். காரை கார்த்திக் ஓட்டினார்.

கிளியனூர் அருகே தென்கோடிப்பாக்கம் மேம்பாலத்தை கடந்த போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

சாலை மறியல்

இந்த விபத்தில் காரில் வந்த சந்திரன் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தகவல் அறிந்ததும் தென்கோடிபாக்கத்தை சேர்ந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். அங்குள்ள மேம்பாலம் பகுதியில் மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்று கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கிளியனூர் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story