காதலை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொருவரை மணக்க முடிவு: இளம்பெண்ணை கொல்ல முயற்சி - வாலிபர் கைது
காதலை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொருவரை மணக்க பச்சைக்கொடி காட்டிய இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னையில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.
கைதான வாலிபர் பெயர் ராஜ்குமார் (வயது 27). சென்னை கீழ்ப்பாக்கம்பகுதியைச் சேர்ந்த இவர் இளம்பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு, உயிராக காதலித்தார். இருவரும் காதல் சிட்டுகளாக உல்லாசமாக பறந்து திரிந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒருநாள், அந்த இளம்பெண் திடீரென்று ராஜ்குமாரை சந்தித்தபோது, உன் காதலை நான் முறித்துவிட்டேன். இனிமேல் என்னை சந்திக்காதே, என்னுடன் செல்போனில் கூட பேசவேண்டாம் என்று பெரிய குண்டை தூக்கிப்போட்டார். ராஜ்குமார், ஏன் இந்த முடிவு என்று கேட்டபோது, அந்த இளம்பெண், உன் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று கூறினார். ராஜ்குமாரின் பதிலுக்கு காத்திராமல், பின்னர் அந்த இளம்பெண் போய்விட்டார்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் தவித்த ராஜ்குமார், காலம் மாறும், நிச்சயம் நம்காதல் தோற்காது, என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார். 6 மாதங்கள் உருண்டோடியது. சமீபத்தில் ராஜ்குமாருக்கு இன்னொரு இடிச்செய்தி காதில் விழுந்தது. அவரது காதலிக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்றும் தெரிய வந்தது. இதைக்கேட்டு இதயம் இடிந்துபோன ராஜ்குமார், தனது காதலியை பார்க்க துடித்தார்.
நேற்று முன்தினம் காதலி, தனது பாட்டியுடன் ரோட்டில் நடந்து செல்வதை ராஜ்குமார் பார்த்தார். உடனே அவரை வழிமறித்தார். நியாயம் கேட்டார். காதலிப்பதற்கு நான், கைப்பிடிப்பதற்கு வேறு ஒருத்தனா என்று ராஜ்குமார் கூச்சல்போட்டார். இதுபோல் போதையில் சண்டை போடுவதால்தான் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றார் காதலி. நான் மது போதையில் சண்டை போடவில்லை. உன்னால் ஏற்பட்ட காதல் போதையில்தான் நான் கத்துகிறேன் என்றார் ராஜ்குமார்.
நம் காதல் மடிந்துவிட்டது. நான் வேறோருவரை திருமணம் செய்ய முடிவு செய்து விட்டேன். எனக்கு வழிவிடு. உன் வழியை பார் என்று காதலி சொன்னது, ராஜ்குமாரை கடுமையாக கோபப்பட வைத்தது. எனக்கு கிடைக்காத நீ, இன்னொருவனுக்கும் கிடைக்கக்கூடாது என்று மடியில் மறைத்து வைத்திருந்த பிளேடால், தனது காதலியை விரட்டி, விரட்டி வெட்டப்பாய்ந்தார் ராஜ்குமார். அவரது கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பித்த காதலி, போலீசை உதவிக்கு கூப்பிட்டார்.
கீழ்ப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டது. அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.