தூத்துக்குடி: ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை


தூத்துக்குடி: ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
x

ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சின்னமணி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவர் நாகப்பட்டினம் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி புனிதா சென்னையில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகுமார் சென்னைக்கு சென்ற நிலையில், அவரது வீட்டில் வேலை செய்து வரும் அமுதா என்ற பெண், தினமும் வீட்டை சுத்தம் செய்து வந்துள்ளார். அதன்படி வழக்கம்போல் இன்று காலை அமுதா வீட்டை சுத்தம் செய்வதற்காக வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது.

இது குறித்து உடனடியாக அமுதா சென்னையில் உள்ள சுகுமாருக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சுகுமார் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 2 பீரோவின் லாக்கரையும் உடைத்து அதில் சுகுமார் அவரது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த சுமார் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story