திருத்தணியில் கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை செய்த வாலிபர்கள்
திருத்தணியில் கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை செய்த வாலிபர்கள் தடுக்க சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
திருத்தணி,
திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கூட்டுச்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அதிவேகமாக திருத்தணி நகருக்குள் சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த 3 பேரும் திருத்தணி மேட்டு தெரு பகுதியில் கஞ்சா போதையில் கையில் கத்தியை வைத்துக்கொண்டு அவ்வழியாக சென்ற பொது மக்களை அச்சுறுத்தி, சாலையில் படுத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கஞ்சா போதையில் ரகளை செய்த 3 பேரையும் தடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரை பணி செய்ய விடாமல், கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் அரக்கோணம் அடுத்த பள்ளியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 23), நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருண் (21), திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனு என்கிற சீனிவாசன் (20) என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கடிகாசலம் அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருண், சீனிவாசன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.