நீண்ட காலமாக தூர்வார படாத திருநின்றவூர் பெரிய ஏரி - குடியிருப்பில் தண்ணீர் புகுவதால் பொதுமக்கள் அவதி


நீண்ட காலமாக தூர்வார படாத திருநின்றவூர் பெரிய ஏரி - குடியிருப்பில் தண்ணீர் புகுவதால் பொதுமக்கள் அவதி
x

ஆவடி அடுத்த திருநின்றவூரில் அமைந்துள்ள ஈஷா பெரிய ஏரி நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் சுமார் 850 ஏக்கர் பரப்பளவில் ஈஷா பெரிய ஏரி அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த ஏரியை சுற்றி ராமதாசபுரம், கன்னிகாபுரம், சுதேசி நகர் திருவேங்கடநகர், முத்தமிழ் நகர், பெரியார் நகர் மற்றும் திருநின்றவூர் கிராமம், கொட்டாமேடு, கொசவன்பாளையம், ராஜாங்குப்பம், சரத்த கண்டிகை ஆகிய பகுதிகள் உள்ளன.

பல ஆண்டுகளாக இந்த ஏரியில் நிரம்பும் தண்ணீரை கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த ஏரியின் முழு கொள்ளளவு 12 அடியாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியானது தூர்வாரப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1990-ம் ஆண்டு ஏரியின் ஒரு பகுதி சுமார் 50 ஏக்கர் இடத்தை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் எடுத்து அதை பொதுமக்கள் குடியிருப்புக்காக வழங்கியது. அதன்படி சுதேசி நகர், முத்தமிழ் நகர், பெரியார் நகர் பகுதி 1, பகுதி 2 ஆகிய பகுதியில் சுமார் 5,000 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு வீடுகளை கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு திருநின்றவூர் நகராட்சி சார்பில் சாலை, மின்விளக்கு, குடிநீர் வசதி சரியாக அமைத்து கொடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

மேலும் ஏரியின் ஒரு பகுதியில் பாதி வரை ஆகாய தாமரைகள் படர்ந்து உள்ளது. இவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகளும், திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வதே இல்லை. மேலும் ஏரியை ஒட்டியும், ஏரி கரைமீதும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் கனமழை பெய்யும்போது திருநின்றவூர் சி.டி.எச் சாலை பகுதிகளிலிருந்து திருநின்றவூர் ஈஷா பெரிய ஏரிக்கு வரக்கூடிய மழைநீர் ஏரியை ஒட்டியுள்ள வீடுகளை கடந்து ஏரிக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. ஏரியை முறையாக தூர்வாரி ஆழப்படுத்தாததால் ஏரி நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மழை காலங்களில் ஏரியை ஒட்டி உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுவதால் வாடகை வீடுகளுக்கு செல்லும் நிலை உள்ளதாகவும் சொந்த வீடுகளில் குடியிருக்க முடியாமல் வாடகை வீடுகளில் பல சிரமங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுமோ என்ற அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். மேலும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது.

தற்போது பருவமழை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் ஒரு கனமழை பெய்தால் ஏரியை ஓட்டிள்ள சுமார் 5 ஆயிரம் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் இதுகுறித்து கூறும் போது, 'ஏரியை சுற்றியுள்ள அனைத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியே செல்ல முடியாமல் உள்ளது.

பொதுமக்கள் பாதிப்புக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு மழைக்கே ஏரியை ஒட்டியுள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் தான் இப்பகுதியில் அதிகமாக வசிக்கிறோம்.

திருநின்றவூர் சி.டி.எச் ரோட்டில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்டவற்றிலிருந்து வரக்கூடிய கழிவுகள் மழை நீருடன் சேர்ந்து நாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாதவாறு தமிழக அரசு நிரந்தர தீர்வை எங்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்' என கோரிக்கை பொதுமக்கள் வைத்துள்ளனர்.


Next Story