முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கந்தசஷ்டி விழா
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த 25-ந்தேதி கந்த சஷ்டி விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தினமும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு உட்பிரகார புறப்பாடு, லட்சார்ச்சனை நடைபெற்றது.கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதி முன்பாக வள்ளி, தெய்வானை உடனாகிய ஆறுமுக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கல்யாண உற்சவம்
இதனையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை உடனாகிய ஆறுமுக பெருமான் மணக்கோலத்தில் எழுந்தளினார். அப்போது சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டன. பின்னர் இசை வாத்தியங்கள் முழங்க ஆறுமுக பெருமான் தாலி கட்டி வள்ளி, தெய்வானையை ஏற்றுக்கொண்டார்.அப்போது பக்தர்கள் அரோகரா... கோஷம் எழுப்பி பூக்களை தூவி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கி வாழ்வில் சுபகாரியம் பிறக்கும் என்பது ஐதீகம் ஆகும். திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் கரூர், திருமாநிலையூர், செங்குந்தபுரம், பசுபதிபாளையம், வெங்கவேடு, தாந்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குளித்தலை
குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரர் கோவில், பாலதண்டாயுதபாணி கோவில், அய்யர்மலை ெரத்தினகிரீசுவரர் ேகாவில், சத்தியமங்கலம் பாலமுருகன் கோவில் ஆகிய கோவில்களில் கந்தசஷ்டியையொட்டி சூரசம்கார விழா நேற்று முன்தினம் அந்தந்த கோவில்களின் முன்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நேற்று அந்த கோவில்களில் நடத்தப்பட்டது. இதையொட்டி முருகன் மற்றும் வள்ளி, தெய்வானை ஆகிய உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. அந்தந்த கோவிலை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையத்தை அடுத்த காகிதபுரம் குடியிருப்பில் வல்லபைகணபதி கோவிலில் முருகன்-வள்ளி, தெய்வானைக்கு தனிசன்னதி உள்ளது. இதையடுத்து நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்து. பின்னர் முருகன், வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து முருகன் வள்ளி, தெய்வானை கழுத்தில் திருமாங்கல்யம் கட்டினார். அப்போது பக்தர்கள் மலர் தூவினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.