நிறங்கள் மாறும் தில்லை மரம்


கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் நிறங்கள் மாறும் தில்லை மரம் காணப்படுகிறது. இந்த மரங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் நிறங்கள் மாறும் தில்லை மரம் காணப்படுகிறது. இந்த மரங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

வனவிலங்கு சரணாலயம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமை மாறா காட்டில் அமைந்துள்ளது. இங்கு புள்ளிமான், மட்டக் குதிரை, நரி, குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

ராமர் பாதம் அருகே 150-க்கு மேற்பட்ட மூலிகை செடிகள் அடங்கிய மூலிகை வனமும் உள்ளது. மேலும் கோடியக்கரை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சன்னாசி முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் இருபுறங்களிலும் தில்லை மரங்கள் காணப்படுகின்றன.

நிறம் மாறும் தில்லை மரங்கள்

இந்த மரத்தின் இலைகள் பல்வேறு நிறங்களில் மாறி வருகிறது. முதலில் பச்சை நிறத்தில் காணப்படும் இந்த மரத்தின் இலைகள், குறிப்பிட்ட காலத்தில் சிகப்பு நிறுத்திலும், மஞ்சள் நிறத்திலும் மாறுகிறது. பின்னர் மீண்டும் பச்சை நிறத்திற்கே மாறி விடுகிறது.

இந்த அதிசய மரத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இந்த மரம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தலவிருட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கோடியக்கரை வனசரகர் அயூப்கான் கூறியதாவது:- கோடிக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் முனியப்பன் ஏரி, பழைய லைட் ஹவுஸ் பகுதியில் இந்த தில்லை மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரத்தின் இலைகள் ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் காணப்படும்.

ஒரு மாதத்தில் முடிந்து விடும்

ஒரு பருவ காலத்தில் இந்த மரத்தின் இலைகள் மஞ்சள் நிறம், சிகப்பு நிறம் உள்பட பல்வேறு நிறங்களில் மாறும். பின்னர் இலைகள் உதிா்ந்து மீண்டும் பச்சை நிறத்தில் இலைகள் வளரும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு மாத காலத்திற்குள் நடந்து முடிந்துவிடும். இந்த மாதம் முழுவதும் மட்டுமே இந்த மரத்தின் இலைகள் நிறம் மாறும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும்.

விஷத்தன்மை உடையது

இந்த மரத்தில் இருந்து வெளிப்படும் பால் விஷத்தன்மை உடையது. இந்த பால் உடலில் பட்டால் அரிப்பு ஏற்பட்டு புண்கள் ஏற்படும். சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தின் அழகை பார்த்து ரசித்து செல்லலாம். மாறாக அந்த மரத்தின் இலைகளை பறித்தோ, அதிலுள்ள காய்களை பறித்தோ ஆபத்தை தேடிக் கொள்ளக்கூடாது.

இந்த தில்லை மரத்தின் பட்டைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்க உதவும் மூலபொருளாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story