எனது வளர்ச்சியை தாங்க முடியாமல் பெண்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள் - சீமான் பேட்டி


எனது வளர்ச்சியை தாங்க முடியாமல் பெண்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள் - சீமான் பேட்டி
x

‘எனது வளர்ச்சியை தாங்க முடியாமல் பெண்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்’ என்று சீமான் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. 30 கோடி மக்கள் தொகை இருந்தபோது 534 நாடாளுமன்ற தொகுதிகள் இருந்தது. தற்போது 130 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில், தொகுதி எண்ணிக்கை ஏன் அதிகரிக்கப்படவில்லை?. நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் எந்த பயனும் கிடையாது. எந்திரங்களில் வாக்குப்பதிவு முறையை மாற்றி ஓட்டு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்.

சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.200 விலை குறைப்பு என்பது தேர்தல் அரசியல் ஆகும். தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் சந்திரயான்-3 விண்கலம் எப்படி நிலவில் சரியாக தரை இறங்குகிறது. மக்கள் வயிற்றுப் பசியில் இருக்கும்போது விண்வெளி பயணம் தேவையா?.

அரசியல் கட்சிகள் தாங்காது

நடிகை விஜயலட்சுமி என் மீது குற்றம் சாட்டியது போலவே, பிரபல கன்னட நடிகர் உள்பட பலர் மீது குற்றம் சாட்டி உள்ளார். உயர்ந்த கருத்துகளுடன் நான் அரசியலுக்கு வந்து உள்ளேன். லட்சியங்களுடன் அரசியலுக்கு வந்துள்ள என் மீது லட்சுமிகளை வைத்து அவதூறு பரப்புகின்றனர். என்னுடைய வளர்ச்சியை தாங்க முடியாமல், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பெண்களை வைத்து அரசியல் கட்சிகள் அவதூறு பரப்புகின்றன. இது மிகவும் கீழ்த்தரமான கேவலமான அரசியல் ஆகும்.

13 ஆண்டுகளாக தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் இதுபோன்று பிரச்சினைகளை நான் சந்திக்கிறேன். கூட்டுக்குடும்பமாக வாழும் என் மீது அவதூறு பரப்புவதை பொறுத்து கொள்ள முடியாது. என்றாவது ஒரு நாள் நான் வெடித்து சிதறினால் அரசியல் கட்சிகள் தாங்காது.

புகைப்படத்தை வெளியிடட்டும்

விஜயலட்சுமியை நான் திருமணம் செய்து இருந்தால் திருமணமான புகைப்படத்தையோ அல்லது கோவிலில் எடுத்த புகைப்படத்தையோ அவர் வெளியிடட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சீமான் ஆவேசமாக பதிலளித்தார்.

1 More update

Next Story