மாணவர்கள் திட்டியதால் அரசு பஸ்சை நடுவழியில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிய டிரைவரால் பரபரப்பு


மாணவர்கள் திட்டியதால்       அரசு பஸ்சை நடுவழியில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிய டிரைவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் திட்டியதால் அரசு பஸ்சை நடுவழியில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்டுசாலை வரை செல்லும் அரசு டவுன் பஸ்சை காலை, மாலை வேளைகளில் மாணவர்கள் நலன் கருதி பள்ளி சென்று வரும் நேரங்களில் இந்த பஸ்சை இயக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இவ்வளவு நாட்கள் மாணவர்கள் மட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டியபடி அந்த பஸ் இயக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது அந்த பஸ் கோலியனூர் கூட்டுசாலை வரை பொதுமக்கள் சென்று வரும் அரசு டவுன் பஸ்சாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கோலியனூர் கூட்டுசாலையில் இருந்து விழுப்புரம் புறப்பட்ட அந்த அரசு டவுன் பஸ், ராகவன்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பள்ளி மாணவர்களை ஏற்றாமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று காலை அந்த அரசு டவுன் பஸ், ராகவன்பேட்டை பஸ் நிறுத்தம் வரும்போது மாணவர்கள், அந்த பஸ்சில் ஏறி அதன் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர், கம்பன் நகர் பகுதியில் அந்த பஸ்சை இயக்காமல் திடீரென சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி வந்து சாலையோரமாக அமர்ந்து விட்டார். இதனால் அதிலிருந்த பயணிகள் மாற்று பஸ்சில் ஏறிச்சென்று விட்டனர். ஆனால் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து, அந்த டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அவர், நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) நான் பஸ்சை இயக்கவில்லை என்று கூறிய பின்னர்தான் மாணவர்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் அந்த பஸ், அங்கிருந்து மாணவர்களுடன் புறப்பட்டுச்சென்றது. இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story