உள்ளகரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்கான இரும்பு தடுப்புகளை அகற்ற முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு


உள்ளகரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்கான இரும்பு தடுப்புகளை அகற்ற முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு
x

உள்ளகரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்கான இரும்பு தடுப்புகளை அகற்ற முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னையை அடுத்த மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மேடவாக்கம் பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ பணிக்காக சாலையின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்புகள் போடப்பட்டு உள்ளது. உள்ளகரத்தில் மேடவாக்கம் சாலையை ஒட்டியுள்ள மதியழகன் தெருமுனை முதல் எம்.ஜிஆர். சாலை தெருமுனை வரை உள்ள கடைகள் முன்பாக மெட்ரோ ெரயில் நிர்வாகத்தினர் இரும்பு தடுப்புகளை வைத்து அடைத்திருப்பதால் அந்த கடைகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது,

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மெட்ரோ ரெயில் பணிகள் எதுவும் நடக்கவில்லை என தெரிகிறது. எனவே பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என கூறி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் வியாபாரிகள் உள்ளகரம் மதியழகன் தெருவில் கடைகள் முன் வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளை அகற்ற முயன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மடிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், மெட்ரோ ரெயில் அதிகாரிகள், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 2 நாளில் கடைகளுக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story