தமிழகத்தை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை மத்திய மந்திரி வி.கே.சிங் பேட்டி


தமிழகத்தை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை மத்திய மந்திரி வி.கே.சிங் பேட்டி
x

தமிழகத்தை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை என மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

நெல்லை,

தமிழகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு வசதியாக 8 நாடாளுமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், அவர்கள் மூலம் மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது குறித்தும் ஒவ்வொரு தொகுதிக்கும் மத்திய பொறுப்பாளர்களாக மத்திய மந்திரிகளை கட்சி தலைமை நியமித்துள்ளது.

அந்த வகையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி வி.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது.சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய மந்திரி வி.கே.சிங், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி வி.கே.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குடும்ப ஆட்சி போல் இல்லாமல் பிரதமர் மோடி மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார்.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது உயர்ந்து உள்ளது. இது தற்காலிக விலை உயர்வுதான். கச்சா பொருட்கள் விலை அதிகரிப்பால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைவாகவே உள்ளது.

நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன. எனினும் ஆய்வு நடத்தப்பட்டு சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணிக்கு வனத்துறை, நீர்வளத்துறை ஒப்புதல் பெறுவதுடன் பல்வேறு காரணங்களால் பணி நடைபெறாமல் உள்ளது. இதேபோல் சில இடங்களில் நெடுஞ்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த பணிகளை விரைந்து முடிக்க மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது. இருந்தாலும் ஆட்சி அமைப்பது மக்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டதுதான். ஆகையால் இனி தமிழகத்தை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை. அ.தி.மு.க.வில் நிலவுவது உள்கட்சி பிரச்சினையாகும். இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story