தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்
பொதுவாகவே தேர்தல் தேதி, ஒரு மாநிலத்தின் தேர்வு தேதிகளுக்கு தகுந்தாற்போல் அறிவிக்கப்படும்.
சென்னை,
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலால் பள்ளிகளில் நடைபெற உள்ள பொதுத்தேர்வு பாதிக்கப்படுமா என்றும், பிப்ரவரியில் ஜாக்டோ - ஜியோ குழுவினர் போராட்டம் அறிவித்துள்ளது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது,
பொதுவாகவே தேர்தல் தேதி, ஒரு மாநிலத்தின் தேர்வு தேதிகளுக்கு தகுந்தாற்போல் அறிவிக்கப்படும். இது வழக்கமான ஒன்று. ஏனென்றால் இது மாணவர்கள் நலன் சார்ந்த விஷயம். மார்ச் மாதம் ஆரம்பிக்கும் தேர்வுகளுக்கு மாணவர்கள் ஒரு வருடமாக தயாராவார்கள் என்பதால், தேர்வு தேதிக்கு தகுந்தாற்போலவே தேர்தல் தேதி அமையும்.
ஏற்கனவே ஜாக்டோ - ஜியோ குழுவினர் 12 விதமான கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். நேற்றுகூட இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இன்றும் ஆலோசனை நடக்கவுள்ளது. ஆலோசனையின் முடிவுகளை முதல்-அமைச்சர் மற்றும் நிதித் துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.